Sunday, June 15, 2014

உலகின் முதல் ரோபோ நீச்சல் வீரன் உருவாக்கம்..!

மனிதர்கள் செய்யும் எல்லாவற்றையும் ரோபோ செய்யும்போது நீச்சலடிக்கக் கூடாதா? எனவேதான் டோக்கியோ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மொடோமு நகஷிமா தலைமையிலான குழுவினர் உலகின் முதல் ரோபோ நீச்சல் வீரனை உருவாக்கியுள்ளனர். இதற்கு ‘ஸ்வுமனாய்டு’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். குட்டியாக, அதிக எடை இல்லாத ஒரு ரோபோவை தெப்பம் போல மிதக்க விட்டு நீச்சலடிக்க வைப்பது ரொம்பவே சுலபம்தான். ஆனால், மனிதனைப் போலவே உயரம், எடை போன்றவற்றைக் கொண்டிருக்கும் ஒரு ரோபோவை நீச்சலடிக்க வைப்பது மிகப் பெரும் கஷ்டம். அதைத்தான் செய்து காட்டியிருக்கிறது இந்த ஜப்பானிய ரோபோ.

3டி ஸ்கேனர் கொண்டு ஒரு நீச்சல் வீரரின் உடலமைப்பைப் போலவே அச்சு அசலாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோ மனிதனைப் போலவே கைகளை வீசி நீந்தும். மனிதர்கள் போடும் பின் நீச்சல், பட்டர்ஃப்ளை ஸ்ட்ரோக் என எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கும். நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றுவதற்கு மட்டுமல்லாமல், நீச்சல் தொடர்பான ஆராய்ச்சிக்கும் இந்த ‘ஸ்வுமனாய்டு’ உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளில் பாதுகாப்புப் பணி, மற்றும் ரோந்துப் பணிகளிலும் இந்த ரோபோவை ஈடுபடுத்தலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.

ரோந்துப் பணிகளில் இருக்கும் நீச்சல் வீரர்களை ஜி.பி.ஆர்.எஸ் பொருத்தி கண்காணிப்பதும், கேமராக்கள் பொருத்தி செயல்பாடுகளைத் துல்லியமாக கணிப்பதும் சிரமம். ஆனால், இந்த ரோபோவில் இது சுலபமாக சாத்தியமாகும். நீச்சல் வேகம் உட்பட பல்வேறு இயக்கங்களை துல்லியமாகக் கணிக்கவும் உதவியாக அமையும். உலகின் அதிவேக நீச்சல் வீரர் என்ற சாதனை படைத்தவரைப் போல மூன்று மடங்கு வேகத்தில் நீந்தும் திறன் படைத்ததாம் இந்த ‘ஸ்வுமனாய்டு’. அடுத்த ஒலிம்பிக் போட்டியின் நீச்சல் பிரிவில் இந்த ரோபோவை அனுமதித்தால் ஏராளமான தங்கப் பதக்கங்களை அள்ளி, அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் படைத் திருக்கும் உலக சாதனைகளை முறியடிப்பது நிச்சயம்.
prince



















No comments:

Post a Comment